மேட்டூர் அணையை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்


மேட்டூர் அணையை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்
x
தினத்தந்தி 16 July 2018 4:15 AM IST (Updated: 16 July 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

காமராஜரின் 116-வது பிறந்த நாளையொட்டி, தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

துவரம் பருப்பு கொள்முதல் தொடர்பாக கூறப்படும் புகாரில் இம்மியளவும் உண்மை இல்லை. தமிழகத்தில் நடைபெறும் டெண்டர்கள் ஒளிவு மறைவு அற்ற டெண்டர் விதிமுறைகளின் படி சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்று வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2 முறை என்னை உணவு துறை அமைச்சராக்கினார்.

தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்களின் கூட்டு முயற்சியால் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மீது புகார் கூறி அரசியல் லாபம் தேட சிலர் முயற்சிக்கின்றனர்.

குடிமராமத்து பணிகள் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளின் பங்களிப்போடு நடைபெற்று வருகிறது. குடிமராமத்து பணி நடத்துவதற்கு தேர்வு செய்யப்படாத பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தான் போராடி வருகின்றனர். அந்த பகுதிகளையும் வரும் காலங்களில் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் அந்த தண்ணீரை நீர்நிலைகளில் தேக்கி வைக்கவும், முழுமையாக தமிழகத்திற்கு பயன்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் மேலும் அணை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தமிழ்செல்வம், கூட்டுறவு நகர வங்கி தலைவர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story