நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் வெட்டி அகற்றம்
கூடலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் வாடல் நோய் தாக்கிய மரங்களை வெட்டி அகற்றி விட்டு சொட்டு நீர் பாசனம் மூலம் திசு வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர்
தேனி மாவட்டத்தில் கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த தென்னை மரங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் பறிக்கின்றனர். சிலர் 30 நாட்களுக்கு ஒரு முறை இளநீர் வெட்டி வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கூடலூர் பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் வாடல் நோய் தாக்கி வருகிறது. இதனால் தென்னை மரங்களில் உள்ள மட்டையின் அடிப்பகுதி பழுத்த மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளிக்கிறது. நோய் தாக்குதலால் மகசூல் படிப்படியாக குறைந்து கடைசியில் தென்னை மரம் பட்டுப் போய் காய்க்காமலேயே கருகி விடுகின்றன.
இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள் மரங்களை வெட்டி வருகின்றனர். அந்த மரங்களை லாரிகள் மூலம் செங்கல் காளவாசல்களுக்கும், கடைகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் ஒட்டுரக திசு வாழைகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story