ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 2½ அடியாக குறைந்தது
ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 2½ அடியாக குறைந்ததால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
செம்பட்டி,
ஆத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் காமராஜர் அணை உள்ளது. ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, சோலைக்காடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த அணைக்கு வருகிறது. ஆத்தூர் காமராஜர் அணைக்கு தண்ணீர் வருவதற்காக இயற்கையாகவே மலையில் நீர்வரத்து வாய்க்கால்கள் அமைந்துள்ளன.
24 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் அக்கரைப்பட்டி ஆத்தூர், சீவல்சரகு, வீரக்கல், வக்கம்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 3 முறை அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பண்ணைக்காடு, தடியன்குடிசை, ஆடலூர், பன்றிமலை மலைப்பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் காமராஜர் அணைக்கு நீர்வரத்து வரவில்லை. இதனால் அணையின் தண்ணீர் மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால் அணை குட்டை போல் காட்சியளிக்கிறது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2½ அடியாக உள்ளது. இதனால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், அணையில் சேறும், சகதியும் அதிகமாக உள்ளது. இதனால், அணைக்கு குளிக்க வருபவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அணைப்பகுதியில் குளிக்க தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story