தீக்குளித்த தாய் சிகிச்சை பலனின்றி சாவு
மங்கலம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி 2 குழந்தைகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாய், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மங்கலம்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த பூமலூர் செட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்கிற தியாகராஜன் (வயது 37). நூற்பாலை அதிபரான இவர், பூமலூர் ஊராட்சி முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இவருடைய மனைவி சிவரஞ்சனி (32). இவர்களுடைய மகள் ஸ்ரீஹர்சந்த் (7) என்ற மகனும் ஹர்சிதா என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு வீட்டின் முற்றத்தில் சிவரஞ்சனி பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதனால் வலி தாங்க முடியாத சிவரஞ்சனி அலறினார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்த தியாகராஜன் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் சிவரஞ்சனி வீட்டின் முற்றத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்தார். உடனே அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் வீட்டிற்குள் தூங்கிய 2 குழந்தைகளையும் காணாததால் அவர்களை தேடியபோது அவர்கள் தண்ணீர் தொட்டிக்குள் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, அந்த குழந்தைகளை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்தபின்னர் இரண்டு குழந்தைகளையும் ஒரே இடத்தில் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதற்கிடையில் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவரஞ்சனி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், அதை தொடர்ந்து அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வந்த சிவரஞ்சனி, மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் மரண வாக்கு மூலம் பெறப்பட்டது. பின்னர் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் “ சிவரஞ்சனியின் சிறுநீரகத்தில் கல் இருந்ததாகவும், இதனால் வலி தாங்கமுடியாததாலும், தீராத மன வேதனையாலும், தீக்குளித்ததாகவும், ஆனால் குழந்தைகள் இறந்தது எப்படி என தெரியாது என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தன்னை பார்க்க வந்த உறவினர்களிடம் என் குழந்தைகளை கொண்டு வந்து காட்டுங்கள், குழந்தைகள் எப்படி இறந்தனர் என தெரியாது என கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் தியாகராஜன் வீட்டிலும், அவருடைய நூற்பாலை ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் தியாகராஜனின் உறவினர்களிடமும், நூற்பாலையில் வேலை செய்த தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயின் மரண வாக்குமூலத்தின்படி குழந்தைகளை தண்ணீர் தொட்டிக்குள் தூக்கிப்போட்டது யார்? அவர்கள் எப்படி இறந்தனர்? இதில் நீடிக்கும் மர்மம்தான் என்ன? என பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக பூமலூர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.
Related Tags :
Next Story