வார்தா புயல் பாதிப்புக்கு பிறகு முத்துரங்கம் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுகிறது


வார்தா புயல் பாதிப்புக்கு பிறகு முத்துரங்கம் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 16 July 2018 4:37 AM IST (Updated: 16 July 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

வார்தா புயலில் பாதிக்கப்பட்ட தாம்பரத்தில் முக்கிய பூங்காவான முத்துரங்கம் பூங்கா, புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது.

தாம்பரம்,

விரைவில் பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா திறந்து வைக்கப்படும் என தாம்பரம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் மார்க்கெட் பகுதியில் முத்துரங்கம் பூங்கா உள்ளது. நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த பூங்காவை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கடந்த தி.மு.க. ஆட்சியில் பூங்கா சீரமைப்பு பணிகள் தொடங்கி, அ.தி.மு.க. ஆட்சியில் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா திறந்து வைக்கப்பட்டது. பூங்கா திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காலை, மாலை வேளைகளில் ஏராளமானவர்கள் பூங்காவில் நடைபயிற்சி செய்து வந்தனர். சிறுவர், சிறுமிகளும் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.

கடந்த வார்தா புயலின் போது பூங்காவில் உள்ள மரங்கள் விழுந்து, பல இடங்களில் சேதமடைந்தது. இதனால் பூங்காவில் உள்ள நடைபயிற்சி செல்லும் பாதைகளும் உடைந்து சேதமாயின.

எனவே பூங்காவை சீரமைக்க வேண்டும் என தாம்பரம் நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பூங்கா மூடப்பட்டு அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

பூங்காவில் பச்சைபசேல் என செடிகளுடன், புல்தரைகள் அமைக்கப்பட்டு பூங்காவை புதுப்பொலிவுடன் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பூங்காவை சுற்றியுள்ள சுவர்களில் கண்ணை கவரும் வகையில் வண்ண, வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

சேதமடைந்த நடைபாதைகளும் சீரமைக்கப்படுகிறது. பூங்கா நடைபாதையை சுற்றி சுமார் 650 மீட்டருக்கு இரும்பு கைப்பிடிகள் அமைக்கப்பட்டு வருகிறது. யோகா கூடமும் தயாராகி வருகிறது.

இந்த பணிகள் காரணமாக பூங்கா மூடப்பட்டு உள்ளதால், இதுவரையில் பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள், தற்போது நடைபயிற்சி செல்ல இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து பூங்காவை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக தாம்பரம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பூங்காவை புதுப்பொலிவுடன் சீரமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பிறகு பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறந்து வைக்கப்படும்” என்றார்.

Next Story