பெற்றோர்-மாணவர்-ஆசிரியர்கள் சந்திப்பு கூட்டம் மாதம்தோறும் நடத்தப்படும்
பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் சந்திப்பு கூட்டம் மாதம்தோறும் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்,
கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் பொதுமக்களிடம் குறைகேட்டு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சில அரசு பள்ளிக்கூடங்களில் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் சிறப்பாக செயல்படுவதில்லை. இனி பள்ளிக்கூடங்களில் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திப்பு கூட்டம் மாதம்தோறும் நடைபெறும்.
கோபி நகராட்சியில் ரூ.51 கோடியில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 1952, 1992, 2002 ஆகிய ஆண்டுகளில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதனை இணைத்து புதியதாக இத்திட்டமானது செயல்படுத்தப்படும். தற்போது கோபி நகராட்சியில் 11 ஆயிரத்து 600 குடிநீர் இணைப்புகள் உள்ளன.
மேலும், பலர் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும் விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் போது கோபி நகராட்சியில் ஒருநாள் விட்டு ஒருநாள் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும். பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். கோபி அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சி பகுதியில் அரசு சார்பில் பொழுதுபோக்கு அம்சத்திற்கு ரூ.10 கோடி செலவில் கலையரங்கம், நீச்சல் குளம், ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
மேலும், ஈரோடு-சத்தி-மேட்டுப்பாளையம் சாலை, அந்தியூர்-சத்தி சாலை, கோபி- தாராபுரம் சாலை ஆகியவை 4 வழி சாலைகளாக மாற்றப்படும்.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. இதன் மூலம் பெற்றோர்-ஆசிரியர்கள், மாணவர்களிடையே சுமுகமான உறவு நிலவும். பள்ளிக்கூடங்களில் கழிப்பிட வசதியை மேம்படுத்துவதற்காக ஜெர்மனி நாட்டின் தன்னார்வ நிறுவனத்தின் மூலம் 1,000 வாகனங்கள் வாங்கப்படும்.
நாள் ஒன்றுக்கு ஒரு வாகனம் 20 பள்ளிக்கூடங்களுக்குச் சென்று சுத்தம் செய்யும். இது ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும். முதற்கட்டமாக 100 வாகனங்கள் செப்டம்பர் மாதம் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தாசில்தார் வெங்கடேஸ்வரன், மின்வாரிய அதிகாரிகள் நேரு, வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி, நகராட்சி பொறியாளர் பார்த்தீபன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story