மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க 18-ந் தேதி டெல்லி பயணம்


மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க 18-ந் தேதி டெல்லி பயணம்
x
தினத்தந்தி 16 July 2018 4:58 AM IST (Updated: 16 July 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க 18-ந் தேதி டெல்லி செல்ல உள்ளதாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றி வந்த துப்புரவு தொழிலாளி சுப்பிரமணி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். மாநகராட்சி சார்பில் சம்பளம் பட்டுவாடா செய்யப்படாததால் அவர் விரக்தி அடைந்து இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து பெங்களூரு மாநகராட்சியை கண்டித்து பா.ஜனதா போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர், காந்திநகரில் தத்தாத்ரேயா வார்டில் உள்ள சுப்பிரமணியின் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது ரூ.10 லட்சத்திற்கான நிவாரண தொகையை குடும்ப உறுப்பினர்களிடம் பரமேஸ்வர் வழங்கினார். அதன் பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

காவிரி பிரச்சினை தொடர்பாக எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற உள்ளது. வருகிற 18–ந் தேதி நாங்கள் டெல்லி சென்று எங்கள் கட்சி மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளோம். மந்திரிசபை விரிவாக்கம், வாரிய தலைவர்கள் நியமனம் குறித்து அப்போது விவாதிப்போம். அதன் பிறகு மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவோம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஒருங்கிணைந்த தலைமையில் காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே உள்பட அனைத்து தலைவர்களும் உள்ளனர். சித்தராமையா எங்கள் தலைவர். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம். இதில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.

தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத்திற்கான காசோலையை வழங்கினேன். சம்பளம் வழங்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்துகொள்வது சரியல்ல. சுப்பிரமணி ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவருக்கு சரியான முறையில் சம்பளம் பட்டுவாடா செய்யப்படவில்லை. அதனால் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டியது அவசியம்.

அவர்களுக்கு நேரடியாக சம்பளம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை மீறி அதிக எண்ணிக்கையில் துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் இந்த சம்பள பட்டுவாடா பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பள பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

பேட்டியின் போது மேயர் சம்பத்ராஜ், மாநகராட்சி கமி‌ஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்ளிட்டோர் உடன் இருநதனர்.


Next Story