கும்மிடிப்பூண்டி அருகே 3 வீடுகளுக்குள் புகுந்து திருட்டு


கும்மிடிப்பூண்டி அருகே 3 வீடுகளுக்குள் புகுந்து திருட்டு
x
தினத்தந்தி 16 July 2018 5:24 AM IST (Updated: 16 July 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் 3 வீடுகளுக்குள் புகுந்து வெள்ளி பொருட்கள், டி.வி., செல்போன் மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்கள், வீட்டின் உரிமையாளர் விரட்டியதால் பொருட்களை ரோட்டில் போட்டு விட்டு பணத்துடன் தப்பிச்சென்று விட்டனர்.

கும்மிடிப்பூண்டி,


கும்மிடிப்பூண்டியில் 3 வீடுகளுக்குள் புகுந்து வெள்ளி பொருட்கள், டி.வி., செல்போன் மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்கள், வீட்டின் உரிமையாளர் விரட்டியதால் பொருட்களை ரோட்டில் போட்டு விட்டு பணத்துடன் தப்பிச்சென்று விட்டனர்.கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள துரபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார் (வயது 55). இவர், சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் ராஜ்குமார், இரவு வேலைக்கு சென்று விட்டார். வீட்டு வாசலில் அவரது தந்தை ராமகிருஷ்ணன்(55) கட்டில் போட்டு படுத்து தூங்கி கொண்டிருந்தார். வீட்டுக்குள் ராஜ்குமாரின் மனைவி சங்கீதா(25) மற்றும் குழந்தைகள் தூங்கி கொண்டிருந்தனர். வீட்டின் கதவு பூட்டப்படவில்லை.

அப்போது நள்ளிரவில் வந்த மர்மநபர்கள், நைசாக வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் செல்போனை திருடிச்சென்றனர்.

அதேபோல அருகே உள்ள சாந்தி(60) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கு தனியறையில் இருந்த டி.வி., ஒரு செல்போன் ஆகியவற்றை மூட்டை கட்டி எடுத்து கொண்டனர்.

மேற்கண்ட 2 வீடுகளிலும் திருடிய பொருட்களை அதே பகுதியில் உள்ள வெங்கடேசன்(44) என்ற தனியார் பள்ளி நிறுவனர் வீட்டின் அருகே வாசலில் வைத்தனர். பின்னர் வெங்கடேசனின் வீட்டில் உள்ள வெளிப்புற இரும்பு கீரில் கதவை சாவி போட்டு திறந்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கு இருந்த ரூ.2,500 மற்றும் செல்போன்களை திருடிச்சென்றனர்.

அப்போது திடுக்கிட்டு எழுந்த வெங்கடேசன், மர்மநபர்களை துரத்திச்சென்றார். இதனால் அவர்கள் 3 பேரும், பணத்தை தவிர்த்து மீதம் உள்ள பொருட்களை ரோட்டிலேயே போட்டு விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

ஒரே பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டிய இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story