டாஸ்மாக் கடையை உடனே மூடவேண்டும் கலெக்டரிடம் இளைஞர்கள் மனு
கள்ளக்குறிச்சி அருகே கொட்டையூர் கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டரிடம் இளைஞர்கள் மனு கொடுத்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியனிடம் கள்ளக்குறிச்சி அருகே கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் உள்ள மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதன் அருகிலேயே குடியிருப்பு பகுதிகளும் உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வருபவர்கள் போதை தலைக்கேறியதும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி சாலையோரமாக அமர்ந்து மது குடிப்பவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமின்றி, அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் கடைவீதிகள், கோவில்களுக்கு செல்லும் பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.
மேலும் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் வீசி விட்டு செல்கின்றனர். இவற்றை பார்த்து பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே மாவட்ட கலெக்டர் இதில் உடனடியாக தலையிட்டு கொட்டையூர் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story