8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி முதல்-அமைச்சர் வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டம்


8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி முதல்-அமைச்சர் வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 17 July 2018 4:30 AM IST (Updated: 17 July 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி, முதல்-அமைச்சர் வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

திருச்சி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலம், மலைகள் ஆகியவை இதன் மூலம் அழிக்கப்பட்டு விடும். சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 4 வழிச்சாலையை தரம் உயர்த்தலாம். அல்லது வெளிநாடுகளில் இருப்பது போல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் பறக்கும் சாலை அமைத்து திட்டத்தை நிறைவேற்றலாம்.

இந்த திட்டத்தை ஒட்டுமொத்தமாக கைவிட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. இதுதொடர்பாக இம்மாத இறுதிக்குள் தமிழக அரசு ஏதாவது ஒரு அறிவிப்பினை வெளியிட வேண்டும். இல்லை என்றால் சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி, ஆகஸ்டு முதல் வாரம் சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் கோவணம் கட்டிக்கொண்டு, கையில் மண்சட்டி ஏந்தியபடி நிற்பார்கள்.

தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரமாக பெய்து வருவதால், காவிரியில் தற்போது ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசு திட்டமிட வேண்டும். ஏரி, குளங்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும். ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக கடலில் கலக்க விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், துணை தலைவர்கள் பொன்னுசாமி, கருப்பையா பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 19 தொழிலாளர்கள் சாவுக்கு காரணமான டி.முருங்கப்பட்டி வெடி மருந்து தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும். தா.பேட்டை, உப்பிலியபுரம் பகுதிகளில் விவசாய நிலங்கள் வழியாக உயர்அழுத்த மின் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story