பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள்


பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 17 July 2018 4:00 AM IST (Updated: 17 July 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட அளவிலான ஜூலை மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நேற்று பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டது. 100, 400, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும், குழுப்போட்டிகளான கைப்பந்து, கபடி மற்றும் நீச்சல் போட்டியும் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 420 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கும், அணிகளுக்கும் பெரம்பலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராமசுப்பிர மணியராஜா, தடகள பயிற்றுனர் கோகிலா, உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story