வெவ்வேறு சம்பவம் தொடர்பாக குழந்தைகளுடன் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
வெவ்வேறு சம்பவம் தொடர்பாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலவன். இவர் செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (வயது 31). இவர் தனது மகள் கனிஷ்காவுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். நுழைவு வாசல் அருகே வந்தவுடன் ரேவதி திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த போலீசார் அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது ரேவதி போலீசாரிடம் கூறும் போது, ‘என்னிடம் உறவினர் ஒருவர் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் கடன் வாங்கினார். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் அவர் ஏமாற்றி வருகிறார். இதனால் விரக்தியடைந்த நான் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் சந்தியா தேவி (35). இவர் நேற்று தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது சந்தியா தேவி, பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை குழந்தைகள் மற்றும் தனது மீது ஊற்ற முயன்றார். அதற்குள் போலீசார் தடுத்து நிறுத்தி பாட்டிலை பறித்தனர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் சந்தியா தேவி கூறும்போது, ‘நான் வெள்ளிப்பட்டறை ஒன்றில் வேலை செய்து வந்தேன். அப்போது எனக்கும் அந்த பட்டறையின் உரிமையாளருக்கு பழக்கம் ஏற்பட்டது. மேலும் நாங்கள் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தோம். அவர் மூலம் எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர் என்னுடன் வாழ மறுத்துவிட்டு, அவரது மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்க சென்றால் அவரும், மனைவியும் என்னை அடித்து விரட்டுகின்றனர். இதனால் விரக்தியடைந்த நான் தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story