தூக்கில் தொங்குவது போல் காதலிக்கு ‘வாட்ஸ்-அப்’பில் படம் அனுப்பிவிட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை காதல் தோல்வியால் விபரீதம்


தூக்கில் தொங்குவது போல் காதலிக்கு ‘வாட்ஸ்-அப்’பில் படம் அனுப்பிவிட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை காதல் தோல்வியால் விபரீதம்
x
தினத்தந்தி 17 July 2018 4:30 AM IST (Updated: 17 July 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

காதல் தோல்வியால் மனம் உடைந்த பட்டதாரி வாலிபர் தூக்கில் தொங்குவது போல் செல்போனில் படம் எடுத்து, காதலிக்கு ‘வாட்ஸ்- அப்’பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்காட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்காடு,

சேலம் மாவட்டம், ஏற்காடு லுத்தர்பேட்டை பகுதியை சேர்ந்த ரொனால்டு சற்குணராஜ். இவருடைய மகன் சின்யூசாமுவேல் (வயது 21). இவர் பி.எஸ்சி. கேட்டரிங் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனது தந்தையின் ஜெராக்ஸ் கடையில் பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சின்யூசாமுவேலிடம் பழகுவதை அந்த பெண் தவிர்த்து வந்தார். தனது காதலி தன்னிடம் பேச மறுத்து ஒதுங்குவதால் காதலில் தோல்வி அடைந்ததாக கருதி மனம் உடைந்த சின்யூசாமுவேல் ஒரு கட்டத்தில் தற்கொலை முடிவுக்கு வந்தார்.


இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் சின்யூசாமுவேலின் வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தனது காதலிக்கு அவர் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது காதலி பேச மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த சின்யூ சாமுவேல், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். இருப்பினும் கடைசி முயற்சியாக தான் தூக்கு மாட்டி கொள்வது போன்ற படத்தை செல்போனில் எடுத்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் தனது காதலிக்கு அனுப்பினார். இதைபார்த்த காதலி, உடனடியாக தான் வீட்டுக்கு வருவதாக செல்போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். பின்னர் தனது காதலன் இறந்து விடுவானோ என்ற பயத்தில் சின்யூசாமுவேலின் வீட்டுக்கு அவர் விரைந்து வந்தார். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதவை தட்டி பார்த்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் அக்கம்பக்கத்தினரை அவர் அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.


அப்போது அங்குள்ள அறை ஒன்றில் சேலையால் உத்திரத்தில் தூக்குப்போட்டு சின்யூசாமுவேல் தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் தனது காதலனின் உடலை பார்த்து கதறி அழுதகாட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இது குறித்த தகவலின் பேரில், ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சின்யூசாமுவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் தோல்வியால் மனம் உடைந்த பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்காட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story