8 வழி சாலைக்கு நிலம் வழங்கிய 35 பேருக்கு வீட்டு மனைப்பட்டா கலெக்டர் ரோகிணி வழங்கினார்


8 வழி சாலைக்கு நிலம் வழங்கிய 35 பேருக்கு வீட்டு மனைப்பட்டா கலெக்டர் ரோகிணி வழங்கினார்
x
தினத்தந்தி 17 July 2018 4:30 AM IST (Updated: 17 July 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு, இதுவரை 35 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ரோகிணி கூறினார்.


சேலம்,

சேலம் மாவட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்தில் சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்திற்கு நில கையகப்படுத்தலில் வீடுகள் பாதிக்கப்படுபவர்களுக்கு, இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் - சென்னை பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பதில் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டு உள்ளார். அதே போன்று புதிய வீடுகள் கட்டி கொடுப்பதற்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கவும் ஆணையிட்டு உள்ளார்.


மேலும், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தும் வகையில் அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்கவும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்தில் வசிக்கும் 15 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 5 பேருக்கு ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை - சேலம் பசுமை வழி சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பில் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை 35 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், பசுமை வழிச்சாலை நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் குழந்தைவேல், கோட்டாட்சியர் குமரேஷ்வரன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story