ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய மேல் முறையீட்டு வழக்கில் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய மேல் முறையீட்டு வழக்கில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜா, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிலுவையில் இருந்தபோது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்ட மனுவை நிராகரித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 354 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தூத்துக்குடி மாவட்டம் இடம்பெறவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களின் பட்டியலில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்க்கக்கோரி மனு அளிக்கப்பட்டு நிலுவையில் இருப்பதால் இப்போதைய நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மனுவை முடித்து வைத்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்து ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு ராஜா, மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில், “கலாச்சாரத்துடன் தொடர்புடைய விளையாட்டாக இருப்பதாலும், ஜல்லிக்கட்டு காளைகளால் நாட்டு மாடு இனவிருத்தி ஏற்படுவதாலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இதை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. 13 மாவட்டங்களில் மட்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிவிட்டு, பிற பகுதிகளுக்கு அனுமதி மறுப்பது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்துக்கு எதிரானது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.