பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் நகை கொள்ளை தூங்கி கொண்டிருந்த பெண்ணிடமும் தங்க சங்கிலி பறிப்பு


பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் நகை கொள்ளை தூங்கி கொண்டிருந்த பெண்ணிடமும் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 17 July 2018 4:30 AM IST (Updated: 17 July 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் நகையை கொள்ளையடித்த மர்ம நபர், வீட்டின் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடமும் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.

திருவெறும்பூர்,

திருவெறும்பூரை அடுத்த கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எழில் நகரில் உள்ள குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் பாய்லர் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வாணி(வயது 38) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். முருகனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருந்தனர்.

இதனால் நேற்று முன்தினம் காலை தாயாரை பார்ப்பதற்காக முருகன் தஞ்சாவூர் சென்று விட்டார். இரவு வர மாட்டேன் என்று முருகன் கூறிவிட்டு சென்றதால், வாணி வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் தனது அறையில் தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் பீரோ இருந்த அறைக்கு சென்று அதில் இருந்த 8 பவுன் நகைகளை கொள்ளையடித்தார்.

பின்னர் வாணி தூங்கி கொண்டிருந்த அறைக்கு சென்ற அந்த நபர், வாணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த வாணி, மர்ம நபரை கண்டு திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர் மதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். அப்போது முன்பக்க கேட்டின் பூட்டை உடைத்து நிலைக்கதவு தாழ்ப்பாளை நெம்பி மர்ம நபர் உள்ளே நுழைந்திருப்பது தெரிய வந்தது. வாணியிடம் போலீசார் விசாரித்தபோது, ஒருவன் மட்டும் தன் கழுத்தில் இருந்து நகையை பறித்ததாகவும், பீரோ உடைக்கப்பட்ட நேரத்தில் தான் தூங்கி கொண்டிருந்ததாகவும் போலீசாரிடம் கூறினார். 

Next Story