தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் கோர்ட்டில் ஆஜர்


தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 17 July 2018 3:30 AM IST (Updated: 17 July 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

மதுபானம் ஏற்றி வந்த லாரிக்கு தீ வைத்த வழக்கு தொடர்பாக, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் வேடசந்தூர் கோட்டில் ஆஜரானார்.

வேடசந்தூர்,

திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி அருகே தாமரைப்பாடியில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்து மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று எரியோடு நோக்கி கடந்த மாதம் 1-ந் தேதி சென்றது. வடமதுரை அருகே உள்ள கோகுல்நகரை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 24) என்பவர் லாரியை ஓட்டி சென்றார். ராஜா (28), மோகன்ராஜ் (34) ஆகியோர் உடன் சென்றனர்.

திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வெள்ளபொம்மன்பட்டி பிரிவு அருகே லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் லாரியை மறித்து, அதில் வந்தவர்களை விரட்டினர். பின்னர் லாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். இதில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரிக்கு தீ வைத்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பெரியசாமி (31), பொருளாளர் அலெக்ஸ் (36) மற்றும் நிர்வாகிகள் மதன்குமார் (21), வேல்முருகன் (27), ரமேஷ் (21) உள்பட 7 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்துக்கு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகனும் தூண்டுகோலாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் மீது கொலை முயற்சி, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் வேல்முருகன் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதாவது, வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு வேல்முருகனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி வேடசந்தூர் கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு முத்து இசக்கி முன்னிலையில் வேல்முருகன் நேற்று ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார். அவரது வருகையையொட்டி, கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த வேல்முருகன் நிருபர்களிடம் கூறும்போது, டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி வந்த லாரியை தீ வைத்ததாக என் மீது வழக்கு போட்டுள்ளனர். இந்த சம்பவம் நடக்கும்போது, நான் சென்னை புழல் சிறையில் இருந்தேன். நான் சிறையில் இருக்கும்போது எப்படி இந்த குற்றத்தில் ஈடுபட முடியும்.

தமிழக அரசு எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், சட்டத்தின் துணை கொண்டு வெற்றி பெறுவேன். எத்தனை அடக்குமுறை வந்தாலும், பொய் வழக்குகள் போட்டாலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக எங்களது அறவழிப்போராட்டம் தொடரும். டாஸ்மாக் கடைகளை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகள் தமிழ்நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரோத திட்டங்களை திணிக்கிறார்கள். போராட்டம் நடத்துகிற அரசியல் கட்சிகளை ஒடுக்குகிறார்கள், என்றார். 

Next Story