தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களை மீண்டும் அழைத்தது ஏன்? நிர்வாகம் விளக்கம்


தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களை மீண்டும் அழைத்தது ஏன்? நிர்வாகம் விளக்கம்
x
தினத்தந்தி 17 July 2018 4:15 AM IST (Updated: 17 July 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களை மீண்டும் அழைத்தது ஏன்? என ஆலை நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தபோது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து மே 28-ந் தேதி தமிழக அரசு உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனால் அந்த ஆலையில் பணிபுரிந்து வந்த பெரும்பாலான ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஊழியர்களை சந்திக்க முடிவு செய்தது.

அதன்படி அனைத்து ஊழியர்களுக்கும் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஊழியர்கள் பலர் மீண்டும் தங்களது குடியிருப்புக்கு நேற்று திரும்பினர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஏற்பட்டு உள்ள கஷ்டமான சூழ்நிலையில் ஊழியர்கள் தொடர்ந்து எங்களுடன் இருப்பது பெருமையாக உள்ளது. அதே நேரத்தில் ஆலை தொடர்பாக தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து ஊழியர்களுக்கு தெரிவிப்பது எங்கள் கடமை. இதனால் அனைத்து ஊழியர்களையும் வரவழைத்து உள்ளோம். இது வழக்கமான ஒரு நிகழ்வுதான். தற்போது அரசு உத்தரவுப்படி ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுகுறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாங்கள் நிரந்தர ஊழியர்கள் யாரையும் பணியில் இருந்து நீக்கம் செய்யவில்லை. அது எங்கள் கொள்கையும் அல்ல. அவர்கள் பணியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மாத சம்பளம் வழங்கி வருகிறோம். எங்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. எனவே தூத்துக்குடியில் பணியாற்றும் ஊழியர்களை வேறு நிறுவனங்களில் பணியமர்த்தி வருகிறோம். ஆலையை சுத்தம் செய்யும் பணிக்காக தான் தற்போது ஊழியர்களை அழைத்து இருக்கிறோம். உள்ளூர் நிர்வாகத்துடன் இணை ந்து ஆலையில் உள்ள தேவையில்லாத ரசாயன பொருட்கள், கழிவுகளை அகற்ற உதவும்படி எங்கள் ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story