விளாத்திகுளத்தில் பரபரப்பு தாலுகா அலுவலக மேற்கூரை பெயர்ந்து விழுந்தது


விளாத்திகுளத்தில் பரபரப்பு தாலுகா அலுவலக மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
x
தினத்தந்தி 16 July 2018 10:30 PM GMT (Updated: 16 July 2018 9:09 PM GMT)

விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் லெனின் உள்பட 48 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலையில் ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் இருந்தனர்.

பகல் 11.30 மணி அளவில் தாலுகா அலுவலகத்தின் கனிமவளத்துறை பிரிவின் காங்கிரீட் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த இடத்தில் யாரும் இல்லாததால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், விளாத்திகுளம் தாலுகா அலுவலக கட்டிடம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நில அளவை பிரிவின் காங்கிரீட் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. இதில் ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். அங்குள்ள ஆவண காப்பக பிரிவும் பழுதடைந்து காணப்படுகிறது.

விளாத்திகுளம் தாலுகா அலுவலக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித் துறையினர் நில அளவீடு செய்து, அரசுக்கு பரிந்துரைத்தனர். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது. தாலுகா அலுவலக கட்டிடத்தை பராமரிப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் ரூ.1½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க பயன்படுத்தினர். விளாத்திகுளம் தாலுகா அலுவலக கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று தெரிவித்தனர். 

Next Story