கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை பெண்ணை எட்டி உதைத்தது


கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை பெண்ணை எட்டி உதைத்தது
x
தினத்தந்தி 17 July 2018 3:45 AM IST (Updated: 17 July 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை பெண்ணை எட்டி உதைத்தது. வனத்துறையினர் விரட்டியபோது ஓடிய அந்த யானை பள்ளத்தில் விழுந்து தானாக எழுந்தது.

டி.என்.பாளையம், 


ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ளது தொண்டூர் கிராமம். வனப்பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் தொண்டூர் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு பெண் யானை தொண்டூருக்கு வந்தது. இரவு முழுவதும் அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் நுழைந்து அந்த யானை பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது.

அதன்பின்னர் நேற்று காலை தொண்டூரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. யானையை பார்த்த தெருநாய்கள் ஒன்று சேர்ந்து குரைக்க தொடங்கின. அந்த நாய்களை பிளிறியபடி யானை விரட்டியது.

சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த கிராம மக்கள் தெருவில் காட்டு யானை நிற்பதை பார்த்து பயந்து போனார்கள். அப்போது தொண்டூரில் இந்து கடம்பூருக்கு ரோட்டில் நடந்து சென்றுகொண்டு இருந்த குருநாதி (வயது 58) என்ற பெண்ணை யானை காலால் எட்டி உதைத்தது. இதனால் சற்று தூரத்தில் போய் குருநாதி விழுந்தார். அதன்பிறகு அங்கிருந்து யானை அடுத்த தெருவுக்கு சென்றுவிட்டது. படுகாயத்துடன் கிடந்த குருநாதியை கிராமமக்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்தநிலையில் யானை ஊருக்குள் புகுந்தது குறித்து சத்தியமங்கலம் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சிறிது நேரத்தில் வனத்துறையினர் தொண்டூருக்கு விரைந்து வந்தார்கள்.

பின்னர் அவர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்தும், தகர டப்பாக்களை தட்டி ஓசை எழுப்பியும், பொக்லைன் எந்திரத்தை இயக்கி ஒலி எழுப்பியும் யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றார்கள். யானை சிறிது தூரம் செல்வதும், பிறகு கிராமமக்களை துரத்துவதுமாக இருந்தது.

இதனால் வனத்துறையினர் அதிக பட்டாசுகளை வெடித்து யானையை தீவிரமாக விரட்ட முயன்றார்கள். அப்போது வேகமாக ஓடிய யானை ஒரு பள்ளத்தில் தவறி விழுந்தது. உடனே வனத்துறையினரும், கிராம மக்களும் யானையை துரத்தாமல் அமைதியாக இருந்தனர்.

பள்ளத்தில் அங்கும் இங்கும் புரண்ட யானை ஒரு கட்டத்தில் தானாக எழுந்து நின்றது. காயம் ஏதும் ஏற்படவில்லை. அதனால் கிராமமக்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள். அதன்பின்னர் யானை தானாகவே காட்டுக்குள் சென்றது. காலை 8 மணி முதல் 11 மணி வரை சுமார் 3 மணி நேரம் யானையை விரட்ட நடந்த இந்த போராட்டத்தால் கடம்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story