ரூ.1 கோடியே 17 லட்சத்தில் கட்டப்படும் 2 புதிய பாலங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் பங்கேற்பு


ரூ.1 கோடியே 17 லட்சத்தில் கட்டப்படும் 2 புதிய பாலங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 July 2018 10:45 PM GMT (Updated: 16 July 2018 9:39 PM GMT)

மஞ்சக்குடி ஊராட்சியில், ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பில் கட்டப்படும் 2 புதிய பாலங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சக்குடி ஊராட்சியில் சோழசூடாமணி ஆற்றின் குறுக்கே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.98 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் பாலத்திற்கும், மஞ்சக்குடி ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி மாநில நிதிக்குழு மானியம் 2018-19-ம் ஆண்டு திட்டத்தின்கீழ் ரூ.19 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் நடைபாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி தலைமை தாங்கினார். நாகை டாக்டர்.கே.கோபால் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு 2 புதிய பாலங்கள் கட்ட அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விவசாயம் சார்ந்த இம்மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால் அதிக எண்ணிக்கையில் இருப்பதை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க தேவைக்கு ஏற்ப பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெய லலிதா எடுத்து கொண்ட பெரும் முயற்சி மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொடர் போராட்டத்தினால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி 3 மாதத்திற்கு தேவையான அரிசி அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஒரு நபர் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அடைத்தாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்காத இடங்களில் இருந்து புகார் வரும்பட்சத்தில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, செயற்பொறியாளர் குமார், தாசில்தார் பிருதிவிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தான கிருஷ்ணரமேஷ், பொற்செல்வி, ஒன்றிய பொறியாளர் வினோத்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாப்பா.சுப்பிரமணியன், முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story