10 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது


10 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது
x
தினத்தந்தி 17 July 2018 3:45 AM IST (Updated: 17 July 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

10 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை 90 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பவானிசாகர், 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணையாகும். தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்ட இந்த அணையின் உயரம் 120 அடி. சகதி 15 அடிபோக 105 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

நீலகிரி மலைப்பகுதியே பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாகும். அங்கு மழை பொழியும்போதெல்லாம் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

பவானிசாகர் அணையில் இருந்து பிரிக்கப்படும் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலமாக சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல் ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை தண்ணீர் உள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டது. அதன்பின்னர் கடந்த 9 ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. அதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை கூட தொடவில்லை.

இந்தநிலையில் இந்த ஆண்டு நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 541 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 89.29 அடியாக இருந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை நீர்மட்டம் 90 அடியை நெருங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். 

Next Story