காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண், விஷம் குடித்து தற்கொலை


காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண், விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 17 July 2018 3:18 AM IST (Updated: 17 July 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்ம இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு, 


சித்தோடு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 28). சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் கோகுலபிரியாவுக்கும் (23) பழக்கம் ஏற்பட்டது. கோகுலபிரியா பி.பி.ஏ. படித்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோர்களுக்கும் தெரியவந்தது.

எனவே இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மகேஷ்சும் கோகுலபிரியாவும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது. கணவன் -மனைவி இவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த கோகுலபிரியா விஷம் குடித்துவிட்டு வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று கோகுலபிரியா இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு திரண்ட கோகுலபிரியாவின் உறவினர்கள் அவரது சாவில் மர்ம இருப்பதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கோகுலபிரியா காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் நாங்கள் யாரும் அவரது வீட்டிற்கு செல்வது கிடையாது. நாங்கள் அனைவரும் ஒரே பகுதியில் வசித்து வரும் நிலையில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மகேஷ், கோகுலபிரியாவை அடித்தார்.

இதைப்பார்த்து நாங்கள் அவரிடம் சென்று கேட்டபோது எங்களையும் அவர் திட்டினார். இதைத்தொடர்ந்து தான் கோகுலபிரியா விஷம் குடித்துவிட்டதாக கூறி அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். கோகுலபிரியாவின் உடலில் பல இடங்களில் காயம் இருப்பதால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

கோகுலபிரியாவின் உடலை இன்று (செவ்வாய்க்கிழமை) பிரேத பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தெரியவரும். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கோகுலபிரியாவிற்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதா தேவி மேல்விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story