அடையாறு ஆற்றங்கரையை ஆக்கிரமித்து 11 மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்படுகிறதா? அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


அடையாறு ஆற்றங்கரையை ஆக்கிரமித்து 11 மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்படுகிறதா? அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 17 July 2018 3:58 AM IST (Updated: 17 July 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை, 

காஞ்சீபுரம் மாவட்டம், அனகாபுத்தூரை சேர்ந்த மகுமுதா என்ற பெண், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘அனகாபுத்தூர், மூகாம்பிகை நகரில் தான் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வந்ததாகவும், அதிகாரிகள் தங்களை போலீஸ் துணையுடன் வெளியேற்றி விட்டதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சைதாப்பேட்டை, மறைமலை அடிகளார் பாலத்துக்கு அருகே, தென்பகுதியில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படுவதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து கூடுதல் அரசு பிளடர் ஆர்.உதயகுமாரிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அவர் அதிகாரிகளிடம் விசாரித்து, அந்த கட்டிடம் கட்டும் இடம் பட்டா நிலம் என்று கூறினார்.

கட்டுமான நிறுவனம்

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

‘காசா கிராண்டு’ என்ற கட்டுமான நிறுவனம், சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றங்கரையில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்து 11 மாடி குடியிருப்பு கட்டிடத்தை கட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே, அந்த நிறுவனத்தை எதிர்மனுதாரராக இந்த வழக்கில் நாங்களே (நீதிபதிகளே) தாமாக முன்வந்து சேர்க்கிறோம். அந்த நிறுவனத்துக்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகள், நிலம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.

அதற்கு அந்த நிறுவனம், கட்டிடம் கட்டி வரும் நிலம் தன்னுடையது என்பதற்கான பத்திரங்கள் உள்ளிட்ட ஆதார ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து, விளக்கம் அளிக்க வேண்டும். அந்த நிறுவனம் குடியிருப்பு கட்டிடத்தை கட்டுவதற்கு முறையான கட்டிட திட்ட அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பதை சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.), பொதுப்பணித்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு அனுமதி பெறப்பட்டிருந்தால், அதற்கான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆய்வு

மேலும், சர்ச்சைக்குரிய பகுதியில், அடையாறு ஆற்றங்கரையின் அகலத்தை அளவிட வேண்டும். அந்த அறிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். நீர்நிலை அருகே அடுக்குமாடி கட்டிடம் கட்டும்போது, பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

ஏற்கனவே, இப்பகுதியில் சைதாப்பேட்டை தாசில்தார் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஆய்வு செய்யவில்லை என்றால், அதை உடனே செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், அந்த விவரங்களை அறிக்கையாக அவர் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக அடுத்த விசாரணையின்போது, சைதாப்பேட்டை தாசில்தார் நேரில் ஆஜராக வேண்டும்.

ஆஜராக உத்தரவு

அவர் மட்டுமல்ல, சைதாப்பேட்டை மண்டல மாநகராட்சி அதிகாரிகள், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோரும் அடுத்த விசாரணைக்கு, ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு தொடர்புடைய அனைத்து ஆவணங்களுடனும், கட்டுமானம் நடைபெறும் இடத்தின் புகைப்படத்துடனும் ஆஜராக வேண்டும். இந்த வழக்கு விசாரணையை நாளை (புதன்கிழமை) தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story