சிறையில் இருந்தபடியே சம்பாதித்து பெற்றோருக்கு ரூ.3 லட்சம் அனுப்பிய கைதி


சிறையில் இருந்தபடியே சம்பாதித்து பெற்றோருக்கு ரூ.3 லட்சம் அனுப்பிய கைதி
x
தினத்தந்தி 16 July 2018 10:29 PM GMT (Updated: 16 July 2018 10:29 PM GMT)

ஆயுள் தண்டனை கைதி ஒருவர் சிறையில் இருந்தபடியே பணம் சம்பாதித்து தனது பெற்றோருக்கு ரூ.3 லட்சம் வரை அனுப்பியுள்ளார்.

மும்பை,

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் சுதீப் பால். ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர், 12-ம் வகுப்பை முடித்தவுடன் சண்டிகரில் உள்ள கலை கல்லூரி ஒன்றில் நுண்கலை பட்டப்படிப்பை முடித்தார்.

அதுமட்டும் அல்லாமல் சிம்லாவுக்கு சென்று புகைப்படக்கலை மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றையும் கற்றுக்கொண்டார். பின்னர் தன் கலை கனவுக்கு தீனிபோட ஆசைப்பட்ட அவர், அதற்கு மும்பை தான் சிறந்த இடம் என கருதி மும்பை வந்தார்.

ஆனால் காலம் அவரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. ஒரு சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் நிறைவில் அவர் குற்றவாளி என்பது நிரூபணமானதை அடுத்து கோர்ட்டு அவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து அமராவதி மாவட்டம் மோர்சி பகுதியில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் சுதீப் பால் அடைக்கப்பட்டார். இருப்பினும் மேற்குவங்கத்தில் வசிக்கும் தனது வயதான பெற்றோருக்கு உதவ முடியவில்லை என்ற கவலை அவரை நச்சரித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த அவருக்கு தான் கற்றுக்கொண்ட கலை கைகொடுத்தது.

சிறையில் இருந்தபடியே ஓவியம் வரைந்து அவற்றை விற்பனை செய்ய தொடங்கினார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது பெற்ேறாருக்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு அவர் ரூ. 3 லட்சம் வரை பெற்றோருக்கு அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரின் முயற்சிகள் சிறையில் உள்ள மற்றவர்களுக்கும் உத்வேகம் அளித்துள்ளது.

Next Story