ஏர்வாடி அருகே பரிதாபம் மோட்டார்சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி


ஏர்வாடி அருகே பரிதாபம் மோட்டார்சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 17 July 2018 3:15 AM IST (Updated: 17 July 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்

ஏர்வாடி,


நெல்லை மாவட்டம் ஏர்வாடி வடக்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் உஸ்மான். இவருடைய மகன் இஜாஸ் அகம்மது (வயது 25). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய தம்பி முகமது பாகின். இவர் நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் இஜாஸ் அகம்மது தனது தம்பி முகமது பாகினை கல்லூரியில் கொண்டு விடுவதற்காக நேற்று காலையில் அவரை மோட்டார்சைக்கிளில் நெல்லைக்கு அழைத்து சென்று கொண்டு இருந்தார். ஏர்வாடி அருகே ஆலங்குளத்தில் உள்ள ஒரு திருப்பத்தில் சென்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.


இதில் இஜாஸ் அகம்மது தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தம்பி முகமது பாகின் காயமின்றி தப்பினார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஏர்வாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இஜாஸ் அகம்மதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான இஜாஸ் அகம்மதுவுக்கு கடந்த 1-ந் தேதி திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான 16 நாட்களில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story