சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு


சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 July 2018 5:36 AM IST (Updated: 17 July 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடையாறு,

சென்னை கோட்டூர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் நேற்று முன்தினம் வழக்கு சம்பந்தமாக அந்தோணி என்பவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தார்.

அப்போது, கோர்ட்டு வாசலில் நின்றிருந்த 2 பேர் தாங்கள் அந்தோணியின் வக்கீல் எனக்கூறி சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜனுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்தனர்.

வழக்குப்பதிவு

இதையடுத்து 2 பேரையும் அங்கிருந்த போலீசார் பிடித்து கோட்டூர்புரம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி இருவரிடமும் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் தேனாம்பேட்டையை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 32), ரகுபதி (32) என்பதும், திருப்பதியில் ஒரு சட்டக்கல்லூரியில் மகேஸ்வரன் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். 

***
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்
மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ராமசாமி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது எடுத்த படம்.

சென்னை, ஜூலை.17-

வீடு, கடையை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓவியர்

சென்னை பாடி ஜெயா ஆர்ட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி(வயது 76). மாற்றுத்திறனாளியான இவர், ஓவியர் ஆவார். இவர், தனது மனைவி முத்தம்மாள்(60) என்பவருடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஜெயராஜ்(50), செல்வராஜ்(40) என 2 மகன்களும், புஷ்பா(30) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

3 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். தற்போது ராமசாமி, தனது மனைவி முத்தம்மாளுடன் தனியாக வசித்து வருகிறார்.

தீக்குளிக்க முயற்சி

இந்தநிலையில் நேற்று ராமசாமி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தார். மனு அளிக்கும் கூடம் அருகே வரிசையில் அமர்ந்திருந்த ராமசாமி, திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை திறந்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 2 பெண் போலீசார், ஓடி வந்து அவரை தடுத்தனர். பின்னர் மற்ற போலீசாரும் அங்கு வந்து முதியவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர்.

மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து அவரை விசாரணைக்காக திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அப்போது போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

நிலத்தை அபகரிக்க முயற்சி

நான், உடல் ஊனமுற்றோர் நலசட்டத்தின் கீழ் அதே பகுதியில் ஒரு கடையை குத்தகை மற்றும் உரிமம் பெற்று அரசு மூலம் சட்டப்படி நடத்தி வந்தேன். எனது கடைக்கு அருகே வசித்து வரும் ஒருவர், எனக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து என் மீது சட்டத்துக்கு புறம்பாக பல பொய் வழக்குகளை தொடுத்ததுடன், அரசு அதிகாரிகளை தூண்டி விட்டு எனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிகள் செய்து வந்தார்.

ஆனால் அதை தடுக்கும் நடவடிக்கையில் நான் ஈடுபட்டேன். இதனால் அந்த நபர், கடந்த 8-10-2017 அன்று அடியாட்கள் மற்றும் போலீஸ், வருவாய் அதிகாரிகள் துணையுடன் ஜே.சி.பி எந்திரம் மூலம் எனது கடை மற்றும் வீட்டை இடித்து தள்ளிவிட்டு, அங்கிருந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியும், எடுத்தும் சென்று விட்டார்.

மிரட்டல்

மனைவியுடன் தனியாக வசித்து வரும் என்னை, அந்த நபர் தொடர்ந்து மிரட்டி வருகிறார். இதுபற்றி நான், பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 7-ந்தேதியும் அந்த நபர் மீண்டும் அடியாட்களுடன் வந்து என்னை மிரட்டி, தாக்கி நிலத்தை அபகரிக்க முயன்றார்.

இதுபற்றியும் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் மனம் உடைந்த நான், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தேன்.

எனது வீடு, கடையை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றேன். இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story