திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 July 2018 5:41 AM IST (Updated: 17 July 2018 5:41 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் மேற்கு பகுதிகளான அண்ணாமலை நகர், அண்ணா நகர், ராமசாமி நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜாஜி நகர், கார்க்கில் வெற்றி நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நகர்களுக்கு செல்பவர்கள் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தை அடுத்த கிராமத்தெரு ரெயில்வே கேட்டை தாண்டிதான் செல்ல வேண்டும்.

மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் கிராமத்தெரு ரெயில்வே கேட்டை கடந்துதான் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வந்து வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

அந்த ரெயில்வே தண்டவாளத்தில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் ஆந்திரா வழியாக டெல்லி வரை செல்லும் விரைவு ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட முறை அந்த ரெயில்வே கேட் மூடி, திறக்கப்படுகின்றது.

சுரங்கப்பாதை

ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு இருப்பதால் தினமும் மேற்கு பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கேட் மூடி இருந்தாலும் உள்ளே நுழைந்து ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அந்த பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

தற்போது மேற்கு பகுதியில் பள்ளிகள், புதிதாக பல அடுக்குமாடி குடியிருப்புகள் வந்துள்ள நிலையில், தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்று வரும் ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில் ஆயிரக்கணக்கானோரிடம் கையெழுத்து வாங்கி அதை அரசிடமும், ரெயில்வே துறை அதிகாரிகளிடமும் வழங்கினர்.

பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செவி சாய்த்து கிடப்பில் போடப்பட்டு உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story