வெடிபொருட்களை அழிக்க காலதாமதம் பொதுமக்கள் வீட்டை காலி செய்யும் அவலம்
தங்கச்சிமடத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை அழிப்பதற்கு காலதாமதமாகி வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் வீட்டை காலி செய்யும் நிலை உருவாகி உள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் எடிசன் என்பவரது வீட்டில் கடந்த 25-ந்தேதி கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக குழி தோண்டினர். அப்போது சுமார் 3 அடி ஆழத்தில் புதைந்திருந்த இரும்பு பெட்டியில் ஏராளமான துப்பாக்கி தோட்டாக்களும், வெடி மருந்துகளும் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டு தோட்டாக்களை ராமநாதபுரம் ஆயுத கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
மற்ற வெடிபொருட்கள் அதே பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த வெடிமருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதால் உடனடியாக அவற்றை அழிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை, மதுரை போன்ற நகரங்களில் இருந்து வெடிபொருள் நிபுணர்கள் வந்து பார்வையிட்டனர்.
இதேபோல ராமேசுவரம் நீதிபதி பாலமுருகன் இந்த வெடிபொருட்களை இருமுறை ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் அபாயகரமான இந்த வெடிபொருட்களை அதிக நாட்களாகியும் இதுவரை எடுத்துச்சென்று அழிக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
அங்கு வசித்து வந்த எடிசன் வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு சென்று விட்டார். தொடர்ந்து வெடிபொருட்களை அழிக்க தாமதமாகும் பட்சத்தில் அருகில் உள்ளவர்களும் காலி செய்து வேறு இடத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். எனவே உயர் அதிகாரிகள் இந்த வெடிபொருட்களை அழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story