தண்ணீர்வரத்து குறைந்தது: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


தண்ணீர்வரத்து குறைந்தது: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 18 July 2018 3:30 AM IST (Updated: 18 July 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் வரத்து குறைந்ததால் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி, 

தண்ணீர் வரத்து குறைந்ததால் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்மேற்கு பருவமழை

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தென்காசி, குற்றாலம், பாபநாசம், செங்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நேற்று 3-வது நாளாக நீடித்தது.

மெயின் அருவியில் குளிக்க அனுமதி

மெயின் அருவியில் மதியத்துக்கு பிறகு தண்ணீர் வரத்து குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் புலியருவி, சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். நேற்று குற்றாலத்தில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. வெயில் அடித்தது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் சுமாராக இருந்தது.

அணைகள் நிரம்புகின்றன

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அணைகளுக்கு வரும் நீரின் வரத்தும் அதிகரித்து உள்ளது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 104.70 அடியாக இருந்தது.

நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 107.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5,689 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு 1,404 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 121.59 அடியாக இருந்தது. நேற்று காலை 127.95 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.

கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 127 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 79.60 அடியாகவும், வடக்குபச்சையாறு அணையின் நீர்மட்டம் 9.50 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 11.51 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 47 அடியாகவும் இருந்தது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

குண்டாறு-63, அடவிநயினார் அணை-31, கடனாநதி-16, பாபநாசம்-11, செங்கோட்டை-10, கொடுமுடியாறு-8, ராமநதி-8, தென்காசி-7, சேர்வலாறு-6, சங்கரன்கோவில்-3, சிவகிரி-2, மணிமுத்தாறு-1.20.

Next Story