திருமண்டல தேர்தல் தகராறு: கிறிஸ்தவ போதகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைப்பு மெஞ்ஞானபுரம் அருகே பரபரப்பு
மெஞ்ஞானபுரம் அருகே திருமண்டல தேர்தல் தகராறில் கிறிஸ்தவ போதகரின் வீட்டை சூறையாடி, மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெஞ்ஞானபுரம்,
மெஞ்ஞானபுரம் அருகே திருமண்டல தேர்தல் தகராறில் கிறிஸ்தவ போதகரின் வீட்டை சூறையாடி, மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்தவ போதகர்
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே பிள்ளைவிளையைச் சேர்ந்தவர் ஜெயகுமார். கிறிஸ்தவ போதகர். இவருடைய மனைவி ஷீபா (வயது 43). நேற்று மாலையில் அரிவாள், கம்புகளுடன் ஒரு கும்பல், ஜெயகுமார் வீட்டுக்கு வந்தது. கும்பல் ஒன்று தங்களது வீட்டை நோக்கி ஆவேசமாக வருவதை கண்டதும் ஜெயகுமார், ஷீபா ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அந்த கும்பல் ஜெயகுமாரின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடியது. அதன்பிறகு வீட்டின் அருகில் நின்ற 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள் ஆகியவற்றுக்கு தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் போலீசார் போதகரின் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போதகர் ஜெயகுமார் கொடுத்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த மாதம் நடந்த தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல கல்விளை சேகர கமிட்டி உறுப்பினர் தேர்தலில் கிறிஸ்தவ போதகர் ஜெயகுமாரின் மனைவி ஷீபா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் ஷீபாவை எதிர்த்து போட்டியிட்ட அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் தோல்வி அடைந்தார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தோல்வி அடைந்த பெண்ணின் சகோதரி சாந்தி மர்மமான முறையில் இறந்தார்.
3 பேர் கைது
இந்த தகராறில்தான் கிறிஸ்தவ போதகரின் வீடு சூறையாடப்பட்டதும், மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக சாந்தியின் கணவரான ராஜகிளி (55), அவருடைய மகன் டேனியல் (28), ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சீமோன் மகன் மெல்பன் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். செல்வின் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான மெல்பன், ராஜகிளியின் தங்கை மகன் ஆவார்.
திருமண்டல தேர்தல் முன்விரோதத்தில் கிறிஸ்தவ போதகரின் வீடு சூறையாடப்பட்டதுடன், மோட்டார் சைக்கிள் கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story