மேம்பாலம் கட்டும் பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல்


மேம்பாலம் கட்டும் பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 18 July 2018 4:30 AM IST (Updated: 18 July 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

மேம்பாலம் கட்டும் பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஈரோடு,

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ரவுண்டானா பகுதியில் 5 ரோடுகள் சந்திக்கின்றன. அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பிரப்ரோடு, பெருந்துறைரோடு, ஈ.வி.என்.ரோடு ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்டப்படுகிறது. அங்கு சாலையோரமாக வாகனங்கள் வழக்கம்போல் சென்று வருகின்றன. ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ரவுண்டானா பகுதி வரை பெருந்துறைரோட்டில் பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மற்ற வழித்தடங்களில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று வருகின்றன.

மேம்பாலம் கட்டும் பணி நடந்து வரும் இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கட்டுமான பணிகள் நடக்கும் பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ஈரோடு பெருந்துறைரோடு ரவுண்டானா பகுதியில் நிறுத்தக்கூடாது என்றும், அதற்கு பதிலாக சற்று தூரமாக சென்று நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பெருந்துறை நோக்கி செல்லும் அனைத்து பஸ்களும் தொடர்ந்து பழைய பஸ் நிறுத்தம் பகுதியிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி வருகிறார்கள். அங்கு ஒரு பஸ் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு இடவசதி இருப்பதால், பின்னால் வரும் வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் நின்றுவிடுகின்றன. இதனால் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

காலை, மாலை நேரங்களில் வழக்கத்தைவிட போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. அப்போதும், பாலம் கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திலேயே பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகளும் புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட பஸ் நிறுத்தத்தில் சென்று நிற்பதில்லை. எனவே புதிதாக மாற்றப்பட்ட நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story