தூத்துக்குடியில் மூடப்பட்ட “ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கொல்லைப்புறமாக முயற்சி” ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி வாசுகி குற்றச்சாட்டு
“தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கொல்லைப்புறமாக முயற்சி நடக்கிறது” என்று ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி கூறினார்.
தூத்துக்குடி,
“தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கொல்லைப்புறமாக முயற்சி நடக்கிறது” என்று ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி கூறினார்.
கல்வி உதவித்தொகை
அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கம் சார்பில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்த, பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு இன்சூரன்சு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் முத்துகுமாரசுவாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவரும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளருமான வாசுகி கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட 40 குடும்பத்தினருக்கு தலா ரூ.25 ஆயிரம் கல்வி உதவித்தொகையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்க இணை செயலாளர் கிரிஜா, தென்மண்டல இன்சூரன்சு ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் சுவாமிநாதன், பொது இன்சூரன்சு ஊழியர் சங்கம் இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், துணை செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார். முன்னதாக ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் ஆலையை பொருத்தவரை அதனை திறக்க வேண்டும் என்று திடீரென மக்கள் மத்தியில் உணர்வு எழுந்து விட்டது போன்ற நாடகம் நடந்து கொண்டு இருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு சாதகமாக யாராவது மனு கொடுக்க வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, மக்கள் நலனுக்காக மனு கொடுக்க வந்தால் அவர்களை விரட்டியடிப்பது போன்றவை நடக்கிறது. இதில் இருந்து மாவட்ட நிர்வாகமும், போலீசின் அணுகுமுறையும் கொஞ்சம்கூட மாறவில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம்.
ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் வேலைவாய்ப்பு இழக்கப்பட்டால் மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்க என்ன செய்வது என்று மாவட்ட நிர்வாகமும், அரசும் சிந்திக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மூடப்பட்ட ஆலையை திறப்பதற்கு கொல்லைப்புறமாக முயற்சி நடக்கிறது. அதை செய்யக்கூடாது.
பெண்களுக்கு எதிராக வன்முறை
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துக் கொண்டே போகிறது.
அகில இந்திய புள்ளிவிவரப்படி 2016-ல் மட்டும் 40 ஆயிரம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள். 15 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதாக அதிர்ச்சியான தகவல்கள் வருகின்றன. ஆனாலும் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த, குறைக்க எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கண்டனத்துக்கு உரியது.
சமீபத்தில் ஒரு சிறுமியை அடைத்து வைத்து வல்லுறவு செய்ததாக தகவல்கள் வந்து உள்ளன. இது போன்ற சம்பவம் நடக்கும் போது அந்த பகுதி மக்கள் என்ன செய்தார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு ஏன் ஏற்படவில்லை. பயமா அல்லது போலீசில் கூறினால் உதவி கிடைக்காது என்ற விரக்தி மனப்பான்மையா? என்பது தெரியவில்லை. ஆகவே இந்த பிரச்சினைகளில் உடனடியாக தமிழக அரசு தலையிட வேண்டும். தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் போலீசார் பிரசாரம் செய்யலாம். குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பதன் மூலம் குற்றம் செய்யக்கூடாது என்ற உணர்வை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story