குடும்பத்தகராறை விலக்க சென்ற கட்டிட மேஸ்திரி துப்பாக்கியால் சுடப்பட்டார்


குடும்பத்தகராறை விலக்க சென்ற கட்டிட மேஸ்திரி துப்பாக்கியால் சுடப்பட்டார்
x
தினத்தந்தி 17 July 2018 11:00 PM GMT (Updated: 17 July 2018 6:46 PM GMT)

அஞ்செட்டி அருகே குடும்பத்தகராறை விலக்க சென்ற கட்டிட மேஸ்திரி துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகே உள்ள கேரட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவரது அண்ணன் மகன்கள் கன்னியப்பன், ஆனந்தன்.

நேற்று இரவு கன்னியப்பனுக்கும், ஆனந்தனுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதை கவனித்த கிருஷ்ணமூர்த்தி அவர்களை விலக்கி சமாதானம் செய்வதற்காக அங்கு சென்றார். அப்போது ஆத்திரம் அடைந்த ஆனந்தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக சுட்டார். இதில் கிருஷ்ணமூர்த்தியின் மார்பு, கை, கால் உள்பட பல இடங்களில் குண்டுகள் பாய்ந்தன. அதில் ரத்த வெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி ஆனந்தனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். ஆனந்தனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குடும்பத்தகராறை விலக்க சென்ற இடத்தில் கட்டிட மேஸ்திரியை அவரது அண்ணன் மகனே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அஞ்செட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story