மாணவர்களுடன் வரிசையில் நின்று சத்துணவு வாங்கி சாப்பிட்ட கலெக்டர்


மாணவர்களுடன் வரிசையில் நின்று சத்துணவு வாங்கி சாப்பிட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 18 July 2018 4:30 AM IST (Updated: 18 July 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

நசியனூர் பள்ளிக்கூடத்தில் மாணவர்களுடன் வரிசையில் நின்று கலெக்டர் எஸ்.பிரபாகர் சத்துணவு வாங்கி சாப்பிட்டார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தினசரி பல்வேறு ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரிகள் எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். எனவே இந்த பகுதிகளுக்கு திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்குவது வழக்கம்.

இதுபோல் தினசரி காலை கிராமம், நகரம் என்று எதோ ஒரு பகுதிக்கு நேரடியாக சென்று துப்புரவு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இவ்வாறு அவர் ஆய்வுகளுக்கு செல்லும்போது அரசு பள்ளிக்கூடங்கள் தென்பட்டால் அங்கேயும் சென்று பார்வையிடுவது வழக்கம்.

இவ்வாறு நேற்று கலெக்டர் எஸ்.பிரபாகர் நசியனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடமான பாரதி கல்வி நிலையத்துக்கு சென்றார். அந்த நேரத்தில் மாணவர்கள் மதிய உணவு வாங்க சத்துணவு கூடத்தின் அருகே வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அதைப்பார்த்த கலெக்டர் அந்த பகுதிக்கு சென்றார். கலெக்டரும் அதிகாரிகளும் பள்ளிக்கூடத்துக்குள் வருவதை பார்த்த தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் விரைந்து வந்தனர். அவர்களைப்பார்த்து புன்னகையுடன் வணக்கம் தெரிவித்த கலெக்டர் சமைத்து வைத்திருந்த சத்துணவு என்ன? என்று பார்த்தார்.

நேற்று அந்த பள்ளிக்கூடத்தில் முட்டை மசாலா மற்றும் கலவை சாதம் வழங்கப்பட்டது. அதைப்பார்த்த கலெக்டர் ஒரு தட்டை வாங்கி மாணவர்களுடன் வரிசையில் நின்று சத்துணவு பெற்றுக்கொண்டார். அவரைத்தொடர்ந்து அவருடன் வந்த பயிற்சி கலெக்டர் பத்மஜாவும் ஒரு தட்டில் உணவை வாங்கினார்.

பின்னர் கலெக்டர் உணவை ருசித்துக்கொண்டே அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்த மாணவ-மாணவிகளிடம் உணவின் சுவை, தரம் குறித்து கேட்டு அறிந்தார். சில மாணவர்களுக்கு கலெக்டர்தான் தங்களுடன் நின்று சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார் என்பது கூட தெரியாமல் சகஜமாக பேசினார்கள். அதை மிகவும் ரசித்துக்கொண்டே கலெக்டர் மகிழ்ச்சியுடன் உணவை சாப்பிட்டு முடித்தார்.

பின்னர் சத்துணவுக்கூட சமையல் கூடம் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளிக்கூடத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டு அறிந்தார்.

பள்ளிக்கூட மாணவர்களுடன் வரிசையில் நின்று கலெக்டர் சத்துணவு வாங்கி சாப்பிட்டதை பார்த்த பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகளிடம் நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி பேசினார்கள்.

Next Story