ஆசிரியர்களுக்குள் பாகுபாடு இருக்கக்கூடாது முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
ஆசிரியர்களுக்குள் பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என்கிற பாகுபாடு இருக்கக்கூடாது என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார்.
செய்யாறு,
செய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளியில் புதிய பாடத்திற்கான ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்திட வேண்டும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான இடைவெளி குறைய வேண்டும். நல்ல தேர்ச்சியை கொடுத்தால் தான் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். பள்ளியில் மாணவர்கள் குறைந்ததால் 350 ஆசிரியர் பணியிடம் உபரியாக கணக்கீடப்பட்டு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் இணைந்து சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.
மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கும் வகையில் யார் குறுக்கிட்டாலும் மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். பள்ளியில் பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என்கிற பாகுபாடு இருக்கக்கூடாது.
மாவட்டத்தில் உள்ள 75 ஆயிரம் ஆசிரியர்கள், ஒருவர் தவறாக நடந்து கொண்டாலும் மாவட்டத்திற்கே அவபெயர்தான். ஆசிரியர்கள் பாடத்தில் திறமையை வளர்த்து கொண்டு நல்ல மாணவர்களை உருவாக்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் இந்தோ - அமெரிக்கன் பள்ளி முதல்வர் சையத் இலியாஷ், பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக அனக்காவூர் அரசு மேல்நிலைப்பள்ளி, புளியரம்பாக்கம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story