திருவொற்றியூரில் தாயை பிரிந்த கன்றுக்குட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்


திருவொற்றியூரில் தாயை பிரிந்த கன்றுக்குட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
x
தினத்தந்தி 18 July 2018 4:00 AM IST (Updated: 18 July 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் கன்றுக்குட்டி ஒன்று தஞ்சம் அடைந்தது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் போலீஸ் நிலைய வளாகத்தினுள் நேற்று முன்தினம், பிறந்து சில நாட்களே ஆன கன்றுக்குட்டி ஒன்று அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தது. போலீசார் விரட்டியபோதும் அது அங்கு இருந்து செல்லவில்லை. நேற்று காலையும் அந்த கன்றுக்குட்டி கத்தி கொண்டே இருந்தது. 

அந்த கன்றுக்குட்டி தாய் பசுவை பிரிந்து வாடுவதை போலீசார் உணர்ந்தனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் மற்றும் போலீசார் கன்றுக்குட்டி குடிப்பதற்கு தண்ணீர் வைத்தனர். ஆனால் தாயை பிரிந்த சோகத்தில் இருந்த கன்றுக்குட்டி தண்ணீர் குடிக்கவில்லை. அதனை தொடர்ந்து போலீசார் அந்த கன்றுக்குட்டியை செல்போனில் படம் பிடித்து மாட்டு மந்தை பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளவர்களிடம் அந்த படத்தை காண்பித்தனர். 

அப்பகுதி மக்கள் அனைவரும் அந்த கன்றுக்குட்டி தங்களுடையது இல்லை என கூறிவிட்டனர். இதற்கிடையே தாயிடம் பால் குடிக்காமல் இருந்த கன்றுக்குட்டி மிகவும் சோர்வடைந்து விட்டது. அதன்பின்பு போலீசார் அந்த கன்றுக்குட்டிக்கு பால் கொடுத்து உதவுவதற்காக மாட்டுமந்தை கோமாதா நகரை சேர்ந்த மணி என்பவரிடம் அதனை ஒப்படைத்தனர்.

மணி தன் தொழுவத்தில் உள்ள ஒரு மாட்டிடம் அந்த கன்றுக்குட்டியை பால் குடிக்க வைத்தார். அதன்பிறகு கன்றுக்குட்டி துள்ளி குதித்து விளையாடியது. தற்போது அந்த கன்றுக்குட்டி மணியின் பாதுகாப்பில் இருப்பதாகவும், கன்றுக்குட்டிக்கு உரியவர்கள் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து அதனை கூட்டிச்செல்லலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். 

Next Story