பாலியல் தொழிலை கைவிட திருநங்கைகளுக்கு போலீசார் வேண்டுகோள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு


பாலியல் தொழிலை கைவிட திருநங்கைகளுக்கு போலீசார் வேண்டுகோள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 18 July 2018 4:30 AM IST (Updated: 18 July 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் தொழிலை கைவிட திருநங்கைகளுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை சூளைமேடு, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு பகுதிகளில், சாலை ஓரமாக நின்று ஒரு சில திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் திட்டம் ஒன்றை நிறைவேற்ற, போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், இணை கமி‌ஷனர் அன்பு ஆகியோர் ஏற்பாட்டின் பேரில், சென்னை சூளைமேட்டில்  திருநங்கைகளுடன் போலீசாரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் செல்வநாகரத்தினம், நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல்பாண்டி ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

நடவடிக்கை

அப்போது திருநங்கைகள் சாலை ஓரம் நின்று பாலியல் தொழிலுக்கு அழைத்து, வாகன ஓட்டிகளுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என்று போலீஸ் தரப்பில் கேட்டுக்கொண்டனர். பாலியல் தொழிலை விட்டுவிட்டு நல்வழிக்கு வந்தால், கவுரவமான வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என துணை கமி‌ஷனர் செல்வநாகரத்தினம் தெரிவித்தார்.

கூட்டத்திற்கு வந்திருந்த ஏராளமான திருநங்கைகள் பட்டப்படிப்பு படித்தவர்களாக இருந்தனர். போலீஸ் அதிகாரிகளுக்கு பதில் கூறிய திருநங்கைகள், ‘‘நாங்கள் 15 நாட்களுக்குள் நல்ல முடிவை சொல்கிறோம்’’ என்று கூறினார்கள். 15 நாட்கள் கழித்து மீண்டும் திருநங்கைகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும், திருநங்கைகளிடம் பாலியல் தொடர்பு வைத்து கொள்பவர்கள் மீதும் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story