காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: 200 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்தது
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எதிரொலியால் கொள்ளேகால் அருகே 200 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்தது.
கொள்ளேகால்,
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எதிரொலியால் கொள்ளேகால் அருகே 200 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்தது.
பாலம் இடிந்து விழுந்ததுகர்நாடகத்தில் தீவிரம் அடைந்த கனமழையால் பெங்களூரு, சிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு, சாம்ராஜ்நகர், உள்பட பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் கே.ஆர்.எஸ்., கபினி, சுபா, வரகி, ஹாரங்கி உள்ளிட்ட சில அணைகள் வேகமாக நிரம்பின.
இதையடுத்து கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி, கபிலா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சிவனசமுத்திரா பகுதியில் ஓடும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பழமையான பாலம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது.
பொதுமக்கள் கோரிக்கைஇதுபற்றி அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று இடிந்து விழுந்த பாலத்தை பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது அந்த பாலம் 200 ஆண்டுகள் பழமையானது என்பதும், அந்த பாலம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது என்பதும் தெரிந்தது. அந்த பாலம் ஏற்கனவே சேதம் அடைந்து இருந்த நிலையில், அந்த பாலத்தின் அருகே புதிதாக இன்னொரு பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் புதிய பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
தற்போது இந்த பாலமும் இடிந்து விழுந்து உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். மேலும் அப்பகுதியில் உடனடியாக பாலம் கட்டி தர வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.