ஊட்டி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அபாயகரமான 17 மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்


ஊட்டி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அபாயகரமான 17 மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 18 July 2018 4:45 AM IST (Updated: 18 July 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அபாயகரமான 17 மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து பகுதியில் ஊட்டி நகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 43 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஊட்டி நகராட்சி பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். பள்ளியின் வகுப்பறைகளுக்கு முன்பு வரிசையாக அபாயகரமான நிலையில் உயரமான மரங்கள் உள்ளன. அந்த மரங்கள் பலத்த காற்றுக்கு அசைந்தாடுவதால் ஒருவிதமான சத்தம் கேட்கிறது. நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்து 17 அபாயகரமான மரங்களை கண்டறிந்தனர். அந்த மரங்களில் சிவப்பு நிறத்தில் எண் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை மரங்கள் வெட்டி அகற்றப்பட வில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் அச்சத்துடனேயே பள்ளிக்கு தினமும் சென்று வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது.

நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி தற்காலிகமாக இயங்கி வருகிறது. மேலும் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தங்கும் விடுதியும் உள்ளது. ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் 165 பேர் படித்து வருகின்றனர். ஊட்டியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு மரங்களின் மரக்கிளைகள் முறிந்து பள்ளியின் மேற்கூரையில் விழுந்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

மேற்கூரை சேதமடையாததால் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக படித்து வருகின்றனர். பலத்த காற்று வீசி வருவதால், பள்ளி வளாகத்தில் உள்ள மரங்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் பள்ளியில் மாணவ-மாணவிகள் பயத்துடன் பாடங்களை படிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் தொடர் மழையால் மரம் முறிந்து விழுந்ததில் கல்லூரி மாணவர் இமான் அகஸ்டின் பரிதாபமாக பலியானார்.

பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் மாணவ-மாணவிகள் பல்வேறு விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வகுப்பறைகளையொட்டி மரங்கள் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி வருவாய்த்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உள்ள அபாயகரமான மரங்களை ஊட்டி நகராட்சி நிர்வாகம் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story