25 ஆண்டுகளுக்கு பின்னர் மின் வசதி பெற்ற மக்கள்
வத்திராயிருப்பு அருகே சேஷபுரம் கிராமத்தில் மத்திய மந்திரியின் நடவடிக்கையால் 25 ஆண்டுகளுக்கு பின்னர் ஆதிதிராவிடர் மக்கள் மின் வசதி பெற்றுள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பேரூராட்சியில் சேஷபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் மக்கள் மின் வசதி இல்லாமல் இருந்து வருகிறார்கள். அவர்களும் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் என பல நிலைகளில் மின் வசதி கோரி மனுக்கள் கொடுத்தும் பலன் ஏற்பட வில்லை.
இந்த நிலையில் மத்திய அரசால் பின்தங்கிய மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டப்பணிகளின் செயல்பாட்டை ஆய்வு செய்ய வந்த மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் 25 ஆண்டுகளாக சேஷபுரம் கிராமத்து ஆதிதிராவிடர் மக்கள் மின் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக எடுத்துக் கூறினர்.
அவர் உடனடியாக இது குறித்து கலெக்டர் சிவஞானத்திடம் விளக்கம் கேட்டார். அப்போது அந்த ஆதிதிராவிடர் மக்கள் பட்டா இல்லாமல் இருந்து வருவதால் மின் இணைப்பு வழங்கப்படாமல் இருக்கலாம் என அவர் தெரிவித்தார். ஆனால் மத்திய மந்திரி, மக்களுக்கு அடிப்படை வசதி வழங்குவதற்கு இம்மாதிரியான காரணங்களை கூறக்கூடாது என்றும் உடனடியாக மின் இணைப்பு வழங்குமாறும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அரசு நிலத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்ததுடன் பேரூராட்சி நிர்வாகம் அவர்களிடம் இருந்து சொத்துவரி வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து மின் வாரியம் அந்த கிராமத்துக்கு மின்சார வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்தது.
கடந்த 25 ஆண்டுகளாக அந்த கிராமத்து மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதும், அந்த கிராமத்து பள்ளி குழந்தைகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள பகுதிகளில் இருக்கும் தெருவிளக்குகளில் படிப்பதுமாக மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். தற்போது மின் வாரியம் 65 வீடுகள் உள்ள இப்பகுதியில் மின் வசதி செய்து கொடுக்க 25 மின் கம்பங்களை நடவும், தெரு விளக்குகளை அமைக்கவும், அங்குள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த கிராமத்தில் உள்ள சின்னராசு, கருப்பையா ஆகியோர் வீடுகளில் உடனடியாக மின் இணைப்பு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் அவர்களது வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற வீடுகளுக்கும் விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார். மத்திய மந்திரியின் நடவடிக்கையால் 25 ஆண்டுகளுக்கு பின்னர் தங்களுக்கு மின் வசதி கிடைத்ததில் சேஷபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோன்று மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் கிராமங்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் பின்தங்கிய மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் கிராமமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தரவேண்டியதும் அவசியம் ஆகும்.
Related Tags :
Next Story