புல்லட் ரெயில் திட்டத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தாதது ஏன்?


புல்லட் ரெயில் திட்டத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தாதது ஏன்?
x
தினத்தந்தி 18 July 2018 4:30 AM IST (Updated: 18 July 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

புல்லட் ரெயில் திட்டத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் பா.ஜனதா அரசு விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தாதது ஏன்? என்று சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

மும்பை, 

புல்லட் ரெயில் திட்டத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் பா.ஜனதா அரசு விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தாதது ஏன்? என்று சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

பால் விவசாயிகள் போராட்டம்

பால் கொள்முதல் விலையை ரூ.5 உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டியம் முழுவதும் விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பால் விவசாயிகளின் போராட்டம் குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

அரசு சிந்திக்க வேண்டும்

விவசாயிகள் சங்க தலைவர் ராஜூ ஷெட்டி எம்.பி. தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது என்ற ஒரே காரணத்திற்காக விவசாயிகளின் போராட்டத்தை புறம்தள்ளிவிட முடியாது. காரணம் விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ அல்லது சாதியையோ ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ சார்ந்தவர்கள் கிடையாது.

கடைசி 4 ஆண்டுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களித்தவர்கள்.

பால் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பதிலாக, அவர்களுக்கு எப்படி நிவாரணம் வழங்குவது என்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.

கோடிக்கணக்கில் செலவு

கோவா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் பால் விவசாயிகளுக்கு ரூ. 5 மானியமாக வழங்குகிறது. மராட்டிய விவசாயிகளும் இதுபோன்ற நிவாரணம் ஏன் வழங்கக்கூடாது?.

அரசு புல்லட் ரெயில், சம்ருதி காரிடார் மற்றும் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவு செய்கிறது. ஆனால் கொள்முதல் விலையை ரூ.5 அதிகரிக்க விரும்பாதது ஏன்?.

பிரதமர் மோடி விவசாய பொருட்களுக்கான ஆதார விலையை அதிகரித்துள்ளார். மராட்டிய விவசாயிகளுக்கும் இதன்மூலம் பயன் கிடைக்குமா என்று முதல்-மந்திரி தெளிவுபடுத்த வேண்டும்.

நானார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், புல்லட் ரெயில் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதில் பிடிவாதம் பிடிக்கும் அரசு, எப்போது விவசாயிகளுக்கு நீதியை வழங்கப்போகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story