வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக பேராசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி


வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக பேராசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 18 July 2018 3:53 AM IST (Updated: 18 July 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த வடமாநிலத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூர், 

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருடைய மகன் பாலாஜி (வயது 32). என்ஜினீயரான இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு என்ஜினீயரிங் முடித்ததும் ஆன்லைன் மூலம் வேலைதேடியிருக்கிறார்.

அப்போது டெல்லியை சேர்ந்த அலெக்ஸ்வில்லியம் என்பவர் ஆன்லைன் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். அவர் கனடா நாட்டில் வேலை இருப்பதாகவும், அந்த வேலையை உறுதி செய்யவும், விசா பெறவும் ரூ.5 லட்சம் செலவாகும், அதை அனுப்பிவைக்குமாறு கூறியிருக்கிறார்.

போனில் பேசிய அவர் அந்த பணத்தை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாதேஸ்வரி அபிரேசவி மற்றும் மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த அர்ஷத் ஜெயின் ஆகியோரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு கூறியிருக்கிறார். அதை நம்பிய பாலாஜி தனது வங்கிக் கணக்கில் இருந்து அவர்கள் இருவரின் வங்கி கணக்கிற்கும் ரூ.5 லட்சத்தை அனுப்பியிருக்கிறார்.

பணத்தை அனுப்பிய சில நாட்கள் கழித்து அலெக்ஸ் வில்லியம் போன் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ என வந்துள்ளது. அதன்பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலாஜி போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதைத்தொடர்ந்து அவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அலெக்ஸ் வில்லியம், மாதேஸ்வரி அபிரேசவி, அர்ஷத் ஜெயின் ஆகிய 3 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story