ஆண்டிப்பட்டியில் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டியில் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி காமராஜர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் அனுசியா தேவி (வயது32). இவருக்கு முதல் திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (39). இவர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சூலூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு அனுசியா தேவி சென்று வந்தபோது அவருக்கும், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டது.
இந்தநிலையில் அனுசியா தேவி ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தன்னை திருமணம் செய்து குடும்பம் நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும், தன்னிடமிருந்து 18 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாகவும் கூறி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story