திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் துணிகரம்: தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி; விழுப்புரம் வாலிபர் கைது
திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற விழுப்புரம் வாலிபரை போலீசார் கைது செய்தனர். காரில் தப்பிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்,
திருட்டு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டுக்கல் அருகேயுள்ள செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று காலையில் வழக்கம்போல் அவர் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து அவருடைய மனைவி சுதா, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் மாலை சுமார் 4 மணி அளவில் சுதா வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அங்கு வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் ஒரு அறையில் இருந்து பொருட்களை எடுத்து வீசும் சத்தம் கேட்டது. இதனால் வீட்டுக்குள் யாரோ பதுங்கி இருப்பதை அவர் அறிந்து கொண்டார்.
உடனே வெளியே வந்து திருடன்... திருடன்... என சுதா கூச்சல் போட்டார். அவருடைய சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதேநேரம் வீட்டுக்குள் இருந்து 3 வாலிபர்கள் வெளியே ஓடினர். மேலும் சிறிது தூரத்தில் சாலையோரத்தில் நின்ற காரை நோக்கி 3 பேரும் ஓடினர். அதில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். ஆனால், மற்ற 2 பேரும் காரில் ஏறி தப்பி விட்டனர். இதையடுத்து பிடிபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து கட்டி வைத்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தாடிக்கொம்பு போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த ஜெயசங்கர் (வயது 34) என்பது தெரியவந்தது. மேலும் அவரும் தப்பி சென்ற 2 பேரும், காரில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர். அதன்படி நேற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தாடிக்கொம்பு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் பூட்டை உடைத்து திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story