கூலித்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை: தந்தை-மகன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை, திண்டுக்கல் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


கூலித்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை: தந்தை-மகன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை, திண்டுக்கல் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 18 July 2018 5:00 AM IST (Updated: 18 July 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை-மகன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

திண்டுக்கல், 

வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 50). இவருடைய மனைவி ஜெயா. இவர்களுடைய மகள் சரண்யா. சுப்புராஜ், விராலிபட்டி பஸ் நிலையத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 3-10-2003 அன்று மாலையில் சரண்யா, தன்னுடைய பாட்டி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, விராலிபட்டியை சேர்ந்த அழகர்சாமி (72) மகன் ராஜசேகரன் என்பவர், சரண்யாவிடம் தகராறு செய்துள்ளார்.

இதுகுறித்து சரண்யா பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அழகர்சாமியின் வீட்டுக்கு சென்று, ஜெயா தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அழகர்சாமியின் உறவினர்கள், ஜெயாவிடம் தகராறு செய்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து அடுத்த நாள் மாலையில் சுப்புராஜும், ஜெயாவும் கடையில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அழகர்சாமி, அவருடைய மற்றொரு மகன் சதீஷ்குமார் (32) மற்றும் அவருடைய உறவினர்கள் சிலர் கடைக்கு சென்று சுப்புராஜிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவரை அடித்து உதைத்துள்ளனர்.

இதனை அந்த வழியாக சென்ற சுப்புராஜின் தம்பியும், கூலித்தொழிலாளியுமான ராஜா என்ற அழகர்சாமி (47) என்பவர் பார்த்துள்ளார். உடனே அவர் ஓடிச்சென்று தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அழகர்சாமி தரப்பினர், ராஜாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து சுப்புராஜ் வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அழகர்சாமி, சதீஷ்குமார், அவர்களுடைய உறவினர் களான தெய்வேந்திரன் (42), ரவிச்சந்திரன் (35), ராமசாமி, நாகராஜ் (70), சுதாகரன் (40) ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதேபோல், குற்றம்சாட்டப்பட்ட அழகர்சாமி தரப்பினர், சுப்புராஜ் தரப்பினர் மீது அதே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், சுப்புராஜ் தரப்பினர் தங்களை தாக்கியதாக கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

கொலை சம்பவம் குறித்து அப்போதைய வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தார். இந்தநிலையில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமசாமி இறந்துவிட்டார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையொட்டி, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அழகர்சாமி உள்பட 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், குற்றம் சாட்டப்பட்ட அழகர்சாமி, சதீஷ்குமார் உள்பட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார்.

மேலும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை கேட்டதும் குற்றவாளிகள் அனைவரும் கண்கலங்கினர். அவர்களின் உறவினர்களும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். தீர்ப்பை கேட்டு அவர்களும் கண்கலங்கியபடியே கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்திருந்தனர். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story