கட்டிட தொழிலாளியுடன் பட்டதாரி பெண் காதல் உறவினர்கள் அழைத்ததால் பரபரப்பு


கட்டிட தொழிலாளியுடன் பட்டதாரி பெண் காதல் உறவினர்கள் அழைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 July 2018 4:30 AM IST (Updated: 18 July 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

கட்டிட தொழிலாளியை காதலித்த பட்டதாரி பெண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை உறவினர்கள் தங்களுடன் வருமாறு அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி லாஸ்பேட்டை புதுப்பேட்டை கனகன்தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனி. வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவரது மகள் சுமித்ரா(வயது 21). பி.காம் பட்டதாரி. இவர் கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தனர்.

அப்போது அவர் கடலூர் மாவட்டம், கீழ் குமாரமங்கலத்தில் உள்ள காதலரான கட்டிட தொழிலாளி ரஞ்சித்(24) என்பவர் வீட்டில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை அங்கிருந்து மீட்டு வந்து புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் தனது காதலன் ரஞ்சித்துடன் செல்வதாக நீதிபதியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் சுமித்ராவை காப்பகத்தில் தங்க வைத்து ஆலோசனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். 2 வாரங்கள் ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் சுமித்ராவை புதுவை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது காதலர்கள் சுமித்ரா, ரஞ்சித்தின் உறவினர்கள் கோர்ட்டுக்கு வந்து இருந்தனர். கோர்ட்டில் ஆஜரான சுமித்ரா தனது காதலன் ரஞ்சித்துடன் செல்வதாக நீதிபதியிடம் மீண்டும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட நீதிபதி, இன்னும் திருமணமாகவில்லை என்பதால் காதலனுடன் அனுப்ப முடியாது. ஆனாலும் தனது விருப்பப்படி முடிவு எடுக்க சட்டப்படி சுமித்ராவுக்கு உரிமை உள்ளது. எனவே அவர் எங்கு செல்ல விரும்புகிறாரோ அங்கு பாதுகாப்பாக விட்டு விடும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சுமித்ராவை போலீசார் கோர்ட்டு வளாகத்தை விட்டு வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவரை சுமித்ராவின் உறவினர்கள் தங்களுடன் வருமாறு அழைத்தனர். ரஞ்சித்தின் உறவினர்கள் தங்களுடன் வருமாறு கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அவர் அங்கிருந்து போலீஸ் வேனில் அழைத்து செல்லப்பட்டார். புதிய பஸ்நிலையத்தில் அவரை போலீசார் இறக்கி விட்டனர். அங்கிருந்து சுமித்ரா தனது காதலன் ரஞ்சித்துடன் சென்றார். இந்த சம்பவத்தால் புதுவை கோர்ட்டு பரபரப்பாக காணப்பட்டது.

Next Story