சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் அமைச்சர் கந்தசாமி பேச்சுவார்த்தை


சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் அமைச்சர் கந்தசாமி பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 18 July 2018 4:34 AM IST (Updated: 18 July 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்திய தேத்தாம்பாக்கம் காலனி பொதுமக்களுடன் அமைச்சர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இளைஞர்களுக்கு அரசுவேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

புதுச்சேரி,

திருக்கனூர் அருகே உள்ள தேத்தாம்பாக்கம் காலனி பொதுமக்கள் தங்களுக்கு இலவச மனைப்பட்டா கோரி நேற்று முன்தினம் அங்குள்ள சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு சாமியானா பந்தல் அமைத்து சுடுகாட்டில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கை தொடர்பாக அமைச்சர் கந்தசாமியை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

இந்த நிலையில் தேத்தாம்பாக்கம் காலனி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் டி.பி.ஆர்.செல்வம் தலைமையில் நேற்று புதுவை வந்தனர். அவர்கள் சட்டசபை எதிரே உள்ள பாரதி பூங்காவில் அமைச்சர் கந்தசாமியை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் தங்களது குறைகளை எடுத்துக்கூறினர்.

இதனை கேட்ட அமைச்சர் கந்தசாமி, ஆதிதிராவிடர் மக்களுக்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு வழங்கவேண்டிய பழைய இடம் தொடர்பாக தற்போது கோர்ட்டில் வழக்கு உள்ளது. எனவே உங்களுக்கு மாற்று இடம் பார்த்து கொடுக்கப்படும். மேலும் இந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு அரசுவேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story