சாலை விதிகளை மீறியவர்கள் 340 பேரிடம் இருந்து அபராதமாக ரூ.11 லட்சம் வசூல்
சாலைவிதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டிய 340 பேரிடம் இருந்து ரூ.11 லட்சம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
வீரபாண்டி,
திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுனர் உரிமம் எடுக்க மற்றும் புதுப்பிக்க வரும் அனைவருக்கும் சாலைவிதிகளை எவ்வாறு பின்பற்றவேண்டும் என்பது உள்ளிட்டவை குறும்படங்கள் மூலம் போட்டு காண்பிக்கப்படுகிறது. இருப்பினும் திருப்பூர் மாநகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வாகன ஓட்டிகளின் விதி மீறல்களும் அதிகமாக நடைபெறுகிறது.
ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிள் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் இயக்குவது, குடிபோதையில் வாகனங்கள் இயக்குவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களில் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலிக்க படுவதாகவும், சில பஸ்கள் அங்கீகரிக்கப்பட்ட இடத்திற்கு செல்லாமல், பாதிவழியிலேயே திரும்பி விடுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதனை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாஸ்கரன், கோகுலகிருஷ்ணன் ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு சென்று பஸ்களில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தது. மேலும் நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 340 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.11 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல்,தொடர்ந்து வாகனங்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரி முருகானந்தம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story