கல்வித்துறைக்கு ரூ.870 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு


கல்வித்துறைக்கு ரூ.870 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 18 July 2018 4:40 AM IST (Updated: 18 July 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

காமராஜர் பிறந்த நாள் விழா: புதுவையில் கல்வித்துறைக்கு ரூ.870 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்த நாள் விழா மாணவர் நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழா நேற்று காலை சாய்பாபா திருமண நிலையத்தில் நடந்தது. விழாவிற்கு அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

கமலக்கண்ணனுக்கு கல்வித்துறை ஒதுக்கியபோது அவர் வேண்டாம் என்று கூறினார். ஆனால், தற்போது சிறப்பான முறையில் அந்த துறையை கொண்டு செல்கிறார். காமராஜர் தமிழகத்தில் பல அணைகள், பள்ளி கூடங்கள், மருத்துவமனைகளை குக்கிராமங்களில் கட்டினார். தலைவர்களை உருவாக்கும் தலைவராக திகழ்ந்தவர். தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்தாலும், வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார்.

காமராஜர் பற்றி விளம்பரம் தயாரிக்க ரூ.3 லட்சம் செலவு செய்ய தயாரான நண்பரிடம், அந்த பணத்தை கொடு, ஒரு பள்ளிக்கூடம் கட்டுகிறேன் என கூறியவர். இதே போல் அவரது சாதனைகளை கூறிக்கொண்டே செல்லலாம். புதுவை மாநிலத்தில் கல்வித்துறைக்கு ரூ.870 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பழைய கட்டிடங்களை புனரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், கல்வித்துறை செயலாளர் அன்பரசு, இயக்குனர் குமார், இணை இயக்குனர் குப்புசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story